இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்ட எந்தவொரு இடத்தையாவது புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் போய்ப் பார்த்துள்ளாரா என மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வி எழுப்பினார்.
கஹட்டோவிட்டாவில் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அம்பாறை, திகன முதல் பேருவளை வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதம் விளைவிக்கப்பட்டன. பள்ளிவாயல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சஜித் பிரேமதாச அந்த இடங்களுக்கு விஜயம் செய்து பார்க்கவில்லை. காரணம் சிங்கள வாக்குகள் தமக்கு இல்லாமல் போகும் என்ற அச்சம்.
இப்படியான ஒருவருக்கே இந்நாட்டு முஸ்லிம்கள் வாக்களிக்கப் போகின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தேசிய பாதுகாப்பை ஒழுங்காக முன்னெடுப்பதற்கு பொருத்தமானவர். மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இந்நாட்டில் இருந்திருந்தால், ஸஹ்ரான் போன்ற பயங்கரவாதிகள் உருவாகி இந்நாட்டில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக பெயர் குத்தப்பட தேவையிருந்திருக்காது எனவும் மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய இந்த கூட்டத்தில் வத்தளை மேயர் உட்பட முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோரும் கலந்து உரையாற்றினர்.

