இலத்திரனியல் திரையைப் பார்த்தே அரசியல் மேடைகளில் உரையாற்றி வருவதாகவும், இந்த திரையின்றி நேரடியாக பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் அறிவிக்காமல் உள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனித்து விவாதத்தில் கலந்து கொள்ள அச்சம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவையும் உடன் அழைத்து வரலாம். மஹிந்தவை மாத்திரமின்றி ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்தாலும் எனது தரப்பில் நான் தனியாகவே பங்குபற்றுவேன். அதற்கான பலமும் தைரியமும் என்னிடம் இருக்கிறது. இவ்வாறு விவாதங்களை நடத்தினால் மாத்திரமே மக்களால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியான தலைவர் யார் என்பதை தெளிவாக இனங்காண முடியும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெரும்பாலான வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கின்றனர். எனினும் அவற்றில் யாருடை விஞ்ஞாபனம் சிறந்தது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனை இலகுவாக தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு வேட்பாளர்களும் தத்தமது யோசனைகள் பற்றி சக வேட்பாளர்களுடன் விவாதித்து அதன் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் எனது பிரதிவாதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளராக இருக்கிறார். எனவே தான் அவரை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கின்றேன் எனவும் வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (03) மாபலகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

