பொது ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (03) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காணப்படுகின்றது.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

