உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மொட்டை ஆதரிக்க விரும்பவில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மொட்டை ஆதரிக்க விரும்பவில்லை. இந்த நிலைமையை சாட்சிகளுடன் எல்பிட்டிய தேர்தல் நிரூபித்தது.
எல்பிட்டிய தேர்தலுக்கு முன்னர்தான் பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இருப்பினும், எல்பிட்டிய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுமார் ஐயாயிரம் வாக்குகளைப் பெற்றது.
அதன்மூலம் சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு அடிப்பணியாமல் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது. அதேபோல் கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்புவதும் அதனூடாக புலப்படுகின்றது.
சிலவேளை பொதுஜன பெரமுன வெற்றிப்பெற்றால் பண்டாரநாயக்கவின் உருவப்படத்தை கூட போட முடியாமல் போகும். அதேபோல் உலகின் முதலாவது பெண்மணி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவப்படத்தையும் அங்கு தொங்கவிட முடியாமல் போகும்.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலத்தில் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கும் ஒருவரையே ஆதரிக்க வேண்டும்.
அப்படியானால் அதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்திரமே ஒரே தெரிவாகும். அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேரந்த பலர் எம்முடன் பேச்சுவார்தைகளை நடத்தி வருகின்றனர்.
இன்றும் அவ்வாறான ஒரு சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அது சாதகமாக முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் அன்னச் சின்னத்திற்கு ஆதரவளிப்பார்கள்´ என தெரிவித்துள்ளார்.

