Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்த சிங்கள வேட்பாளருக்கும், வாக்களிக்கும்படி கூறமாட்டோம்

October 30, 2019
in News, Politics, World
0
தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் இன்று -29- மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் கீழ்வரும் தீர்மானங்களை எமது கட்சியின் நிலைப்பாடாக எடுத்து எமது நிலைப்பாட்டை பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை முன் வைத்த ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் காலந்தாழ்த்தாது தெரியப்படுத்துகின்றோம்.
கடந்தகால வரலாற்றையும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்து மக்கள் தமது ஜனநாயக உரித்தைப் பயன்படுத்த வேண்டும்
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையிலும் நாளை மறுதினம் தபால் மூலம் வாக்களிப்பு நடைபெற இருக்கும் வேளையிலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிப்பது தொடர்பில்  தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கில் பின்வரும் கருத்துக்களை வெளியிடுகின்றோம்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களின் அனுசரணையுடன் ஆறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து  தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்னர் 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்தோம். அந்த ஆவணத்தில் ஐந்து கட்சிகள் ஒப்பமிட்டு  முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதன் பிரதியும் மொழி பெயர்ப்பும் அனுப்பி வைக்கப்பட்டன.
ஒற்றை ஆட்சி முறைமையை நிராகரித்து இணைந்த வடக்கு – கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கை இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் இந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என்றும் அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் நாம் அறிவித்திருந்தோம்.
ஆனால், எந்த பிரதான கட்சிகளின் முக்கிய சிங்கள ஜனாதிபதி  வேட்பாளருமே இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் எம்முடன் பேசுவதற்கு முன்வரவில்லை. நாம் எமது கோரிக்கைகளை உத்தியோகபூர்வமாக சிரிதுங்க ஜயசூரிய என்ற சிங்களப் போட்டியாளருக்கு அனுப்பாதபோதும் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்றும் தாம் அவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் பத்திரிகை வாயிலாக அறிவித்துள்ளார்.
ஒரு சிங்கள வேட்பாளர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று கூறியிருப்பது மன மகிழ்வைத் தருகின்றது. பொதுவாகத் தமிழ் மக்களின் மிகவும் நியாயமான இந்தக் கோரிக்கைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து சென்று தமிழ் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள், துன்பங்கள் மற்றும் துயரங்களை எடுத்துக்கூறி இலங்கைத்தீவில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆற்றலும், ஆளுமையும், துணிச்சலும், தூர நோக்குப் பார்வையும் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்குமே இல்லை.  திரு.ஜயசூரிய அவர்கள் இதற்கு விதிவிலக்கு போல் தெரிகின்றார். எது எவ்வாறிருப்பினும் அவர் இதுவரையில் எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எமது கோரிக்கைகள்  தொடர்பில் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுகிய அரசியலிலே தான் மற்றைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள். துரதிஸ்டவசமாக தென் இலங்கையின் தேர்தல் இயக்கவியலும் முற்றுமுழுதாக மகாவம்ச மனோநிலைக்கு உட்பட்டுள்ளது என்று காண்கின்றோம்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஆட்சிக்கு வந்த எல்லா சிங்களக் கட்சிகளுமே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதில் ஏட்டா போட்டியாகவே செயற்பட்டுவந்திருக்கின்றன. சிங்கள கட்சிகள் எமக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதும், உடன்படிக்கைகளைக் கிழித்து எறிவதுமே வரலாறுபூராக நிறைந்து இருந்துள்ளன. இருந்தபோதிலுங் கூட மீண்டும் எமது கோரிக்கைகளை அவர்கள் முன்பாக வைத்து அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தோம்.
நாளை மறுதினம் 31ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு தொடங்குகின்றது. ஆனால்,  எமது இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்தி எம்முடன் கலந்துரையாடலை மேற்கொள்ள எந்த சிங்கள வேட்பாளரும் இதுவரை தயாராக இல்லை.
அத்துடன் நேற்றுத் திங்கட் கிழமை வரை குறிப்பிட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் கூட ஒரு பொது முடிவுக்கு இதுவரை வரவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதான சிங்களக் கட்சிகள் எம்முடன் பேசக் கூடத் தயாராக இல்லாத சூழ் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
அதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை எம்மக்கள் பயன்படுத்த விரும்பின் எமது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம்.
எம்மால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான சிங்கள வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளாத இத்தகைய சூழ்நிலையில் அவற்றை நாமே கை விட்டு எமது சகோதரக் கட்சிகள் எந்த ஒரு முக்கிய கட்சி வேட்பாளருக்கேனும் களம் அமைத்து, கூட்டங்கள் கூட்டி, வெளிப்படையாக வாக்குக் கேட்க மாட்டார்கள் என நம்புகின்றோம். எமது நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடக் கூட விரும்பாத வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கும் தார்மீக உரிமை எந்த ஒரு கட்சிக்கும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த ஜனாதிபதி தேர்தலை அணுகும் வகையில், நாம் தயாரித்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான கட்சிகளின் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும், எமது அரசியல் நடவடிக்கைகளை இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளோம். இந்த கோரிக்கைகள் இந்தத் தேர்தலுடன் கைவிடப்பட முடியாத கோரிக்கைகள். தெரிவுசெய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதியுடனும் அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்துடனும் இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்வுக்காக நாம் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
அதே வேளை சர்வதேச சமூகம்  இனிமேலும் இலங்கை அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் ஏமாந்துபோகாமல் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு  நீதியை பெற்றுகொடுப்பதற்கும் இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வினை பெற்று கொடுப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரி நிற்கின்றோம் – என்றுள்ளது.
Previous Post

கோட்டாபய குறித்து போலியான, வீடியோ பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு

Next Post

சஜித் பிரேமதாசவிடம் Mp பதவி கேட்ட மலாய் சமூகத்தினர்

Next Post

சஜித் பிரேமதாசவிடம் Mp பதவி கேட்ட மலாய் சமூகத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures