திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். நான்கு நாட்களுக்கு மேலாக குழந்தையை மீட்க நடந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது. அழுகிய நிலையில் அவரது உடல் மீ்டக்கப்பட்டது.
சுஜித்தின் அகால மரணம் மனிதநேயம் உள்ள அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. தண்ணீருக்காக போடப்பட்ட போர்வெல் கண்ணீரை வரவழைக்கும் எமனாக மாறியுள்ளது. சுஜித்தின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி டுவிட்டரில், ‛‛சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ் டுவிட்டரில், ‛‛ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக் டுவிட்டரில், ‛‛கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?” என பதிவிட்டுள்ளார்.

