ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள் உதவிபுரிவதாக தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபட வேண்டுமென்றால், அவர்கள் தமது பதவிநிலைகளில் இருந்து விலகவேண்டும்.
இம்முறை தேர்தலில் தாம் சுயாதீனமாகவும் நடுநிலை வகிக்கப்போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவரது பிரதிநிதிகளாக மாகாணங்கில் செயற்படும் ஆளுநர்கள் பக்கச்சார்பாக கட்சிசார்ந்து செயற்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளுநர்களை, அவர்களது பெயருக்கு முன்பாக ‘கௌரவ ஆளுநர்’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அந்த ‘கௌரவம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநர்களுக்கு இருக்கின்றது.
இவ்வாறு இருக்கையில், கட்சிசார்ந்து செயற்படும் ஆளுநர்களிடம் நாம் கேட்கும் பிரதான விடயம், உங்கள் பெயருக்கு முன்னால் சூட்டப்பட்டுள்ள ‘கௌரவ’ என்ற பதத்தை மறந்துவிட்டா இவ்வாறு செயற்படுகிறீர்கள் என கேட்கின்றோம்.
தற்போதைய நிலையில் நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் அதிகாரமும் ஆளுநர்களின் வசம் காணப்படுகிறது.
இவ்வாறிருக்கையில், ஆளுநர்கள் பக்கச்சார்பாக செயற்படும்போது மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள், கட்டிடங்கள், வேறு அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பாக நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.
அதேபோல், உங்கள் மாகாணங்களின் ஆளுநர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானித்தால் உடனடியாக கஃபே அமைப்பிற்கு முறையிட முடியும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை கஃபே அமைப்பிற்கு 387 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றில், சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

