பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது எனவும், ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போருக்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை எனவும், இராணுவத் தளபதியே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதையும் கோட்டாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார் எனவும் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்’ என்று நழுவமாட்டார். இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்? அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஸவிடம் யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் சரத்பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார்.
நான் அவரைப் போன்று பந்தைக் கைமாற்ற மாட்டேன். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

