நான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லையெனவும், முஸ்லிம் சமூகத்தின் முகவராக மாத்திரமே போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் நடைபெற்ற தனது பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை வெற்றியுடன் ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. மத்திய கொழும்பை நாம் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என்று கூறுவோம். அது போலத்தான் எல்பிட்டியவும் பொதுஜன பெரமுனவின் கோட்டை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஆளுநரின் வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஸவுக்குத் தான் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார். இதற்கு நாமல் ராஜபக்ஸவும் தனது மறுப்பை தெரிவித்திருந்ததாக சகோதர ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இதனைக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

