20,000 ரூபா மாத சம்பளம் பெறும் ஒருவர் 200,000 ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கினால், அவர் களவெடுத்த பணத்தில்தான் அதை வாங்குகிறார் என்றா அர்த்தம்? நாடாளுமன்ற உறுப்பினராக 54,000 ரூபா சம்பளம் பெற்ற நான், 75,000 ரூபா கட்டுப்பணம் செலுத்துவது சாதாரண விடயம். அந்த பணத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாது. அந்த பணத்தை பற்றி கேள்வியெழுப்புவது நாகரிகமற்றது என காட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று (10) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் பணம் வாங்கிக் கொண்டா தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பது மிகவும் மோசமான கேள்வி. 2010 இல் லண்டனில் ஒரு தொலைக்காட்சியிலும் இப்படி கேள்வியெழுப்பினர். அவர் இப்பொழுதும் என்னை கண்டால் வருத்தம் தெரிவிப்பார். அந்த நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு 54,000 ரூபா சம்பளம்.
ஒருவர் 20,000 சம்பளத்தில் இருப்பவர் ஒரு இலட்சம், இரண்டு இலட்சத்திற்கு மோட்டார் சைக்கிள் எடுத்தாரென்றால், களவெடுத்தவதென்றா சொல்ல முடியும், லீசிங்கிலோ வேறு வழியிலோ அதை பெறுவீர்கள். ஐந்து இலட்சம், பத்து இலட்சம் என்றால் எங்கிருந்து வந்ததென கேட்கலாம். இது வெறும் 75,000 காசு. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் எடுப்பீர்களா? இல்லை.
அந்த காசைப்பற்றி கேள்வியெழுப்புவது நாகரிகமில்லை.
ஆனால் நீங்கள் எழுப்புங்கள். 2014இல் வடக்கு வைத்தியர்களிற்கு நியமனம் கொடுக்க வேண்டுமென கோரியபோதுதான் பசில் ராஜபக்சவை சந்தித்தேன். கோட்டாபயவை ஒருபோதும் சந்தித்தில்லை. கட்டுப்பணம் செலுத்திய அன்றுதான் நெருக்கமாக பார்த்தேன். ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தன் ஆகியோருடன் தூதுக்குழுவாக சென்றபோதுதான் மஹிந்தவை சந்தித்தேன். அந்த பேச்சில் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது. அன்று மஹிந்த தந்த விருந்தில் நான் சாப்பிட மறுத்து விட்டேன். அப்போது மஹிந்த கூறினார், “சிவாஜி இன்று பிரபாகரனின் பிறந்தநாள் அதனால்தான் சாப்பாடு தருகிறேன். சாப்பிடுங்கள்“ என்றார்.
எங்கட ஆட்கள் நல்ல ருசி என சாப்பிட்டார்கள். அன்று எனது தந்தையின் நினைவுநாள். அதனால் காலையிலிருந்து சாப்பிடவில்லை. சாப்பாட்டை பார்க்க எனக்கு மனப்போராட்டமாக இருந்தது. பிறகு ஊடகங்கள் எழுதின, ஆதரவான கட்சிகள் சந்தித்தன என. நான் சொன்னேன், கறுப்பு சட்டையல்லவா நான் போட்டிருந்தேன் என.
பின்னர் டக்ளசிடம் மஹிந்த கேட்டாராம், “என்ன கரும்புலியை கூட்டி வந்திருக்கிறாய்“ என.
சிவாஜிலிங்கத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும். எதிர்க்கட்சி தலைவரென்றால் என்ன, பிரதமர் என்றால் என்ன, ஜனாதிபதியென்றால் என்ன.. ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜோசெப் பரரராஜசிங்கத்தின் படுகொலையாளிகளின் பெயரை கூறியவன் நான்.
இதில் பசில், கோட்டா என கூறிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.
கோட்டா, சஜித் யாரும் வரலாம். அதில் எமக்கு பிரச்சனையில்லை. கோட்டா பத்து தலைகொண்ட இராவணன் போல அவர் பலமாக வந்தாலும் தமிழினம் அவரை எதிர்கொள்ளும். சர்வதேசத்தின் ஊடாக எமது கோரிக்கைகளை வெல்வோம். நாம் மடிந்தாலும், விழவிழ எழுவோம் என எமக்கு பின்னால் வருவதற்கு பலரை ஆயத்தப்படுத்தும் களமாக, இந்த வேட்புமனு அமைந்திருக்கிறதென்பதை எதிர்கால வரலாறு நிச்சயம் சொல்லும் என்றார்.

