ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சில உள்ளக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டி உள்ளதால் இறுதி முடிவு தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கை நாளை மறுதினம் அநுராதபுரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

