அமைச்சர் சஜித் பிரேமதாச தலையிலான ஐ.தே.கவின் குழுவினர் அரச தலைவர் என்ற ரீதியிலேயே ஜனாதிபதியைச் சந்தித்தனர் எனவும் ஐ.தே.கவுடன் கூட்டணியை அமைக்கும் எந்தவொரு எண்ணமும் சு.கவுக்கு இல்லையெனவும் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. குழுவினர் நேற்று ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். அது அரசாங்கத்தின் விடயங்கள் பற்றிய சந்திப்பாக அமைந்தது. அரச தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியை எவர் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகக் கூடியவர்களாக பொதுஜன பெரமுனவினரே உள்ளனர். அவர்களுடனான பேச்சுகள் தோல்வியடைந்தால் மறுபுறம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் சு.கட்சி ஈடுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

