நைஜீரியாவில் குழந்தைகள் தொழிற்சாலை என அழைக்கப்படும் இடத்தில் இருந்து 19 பெண்களும், சிறுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.
நைஜீரியாவின் பல்வேறு இடங்களில் இருந்து 15 முதல் 28 வயதுடைய பெண்களை வீட்டு வேலை தருவதாகக் கூறி அந்நாட்டின் மிகப்பெரிய நகரான லாகோசுக்கு அழைத்து வந்து, கர்ப்பமாக்கி, குழந்தை பெறச் செய்து அதை விற்று பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குழந்தைகளின் தொழிற்சாலை என அழைக்கப்பட்ட அந்த இடத்தில், கடந்த 19-ம் தேதியே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட உண்மையான நபர்களைப் பிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டனர். சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் திங்களன்று அங்கு மீண்டும் நுழைந்த போலீசார் 45 மற்றும் 54 வயதுடைய இரு பெண்களை கைது செய்ததோடு, அங்கிருந்த 19 பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டனர்.
3 குழந்தைகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன. ஆண் குழந்தைகளுக்கு 5 லட்சம் நைரோக்களும், பெண் குழந்தைகளுக்கு 3 லட்சம் நைரோக்களும் என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்று வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

