சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. 20.11.1989 அன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக 18 வயதிற்குக் குறைந்த அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அடித்தளமாவர். அவர்களது எதிர்காலத்தை திட்டமிட்டு நெறிப்படுத்தி சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியவர்களாக மாற்றியமைப்பது வளர்ந்தோர் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தெற்காசியாவில் சிசு மரண விகிதம் குறைந்த நாடு இலங்கையாக காணப்படுகின்றது.
அத்துடன் இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாக கருதப்படுகின்றனர்.
முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சிறுவர் தின தேசிய வைபவம் மாத்தளை எட்வேர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்வார்.
உலக சிறுவர் மற்றும் வயோதிபர் தினத்தை முன்னிட்டு றுஹூணு சேவை ஒழுங்கு செய்துள்ள இசை நிகழ்ச்சி இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணி முதல் இடம்பெறும்.
தெற்கு, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாண சிறுவர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. தென் மாகாண ஆளுனர் ஹேமால் குணசேகரவின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

