ஹபரணை – ஹிரிவடுன்ன – தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பானவர்களுக்கிடையில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக வனவிலங்கு, அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
ஹபரணை – திகம்பதஹ ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் 7 யானைகளின் சடலங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டன.
உடலில் விஷம் கலந்தமை காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த யானைகளின் உடற்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யானைகள் உயிரிழந்தமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிற்கு வனஜீவராசிகள் அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

