சவூதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, அந்நாட்டின் வான் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான ஸ்டாஃப் ஜெனரல் ஜோசஃப் டன்ஃபோர்டு, அங்கு அனுப்பப்படும் படை வீரர்களின் எண்ணிக்கை மிதமாகவே இருக்கும் என்றும் அது ஆயிரங்களைத் தொடாது என்றும் கூறியுள்ளார். எனினும், அவர்கள் எதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று அவர் விவரிக்கவில்லை.
சவூதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய்க் கிடங்கு உள்ளிட்டவை மீது ஆளில்லா வானூர்திகள் மூலம் இம்மாதம் 14ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலால் அந்த ஆலையும் எண்ணெய்க் கிடங்கும் தீப்பற்றி எரிந்தன. அங்கிருந்த லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்தது. இதனால், அந்த ஆலையின் கிட்டத்தட்ட பாதியளவு எண்ணெய் உற்பத்தி குறைந்தது. உலகிற்கு தேவையான 10 விழுக்காடு கச்சா எண்ணெய் சவூதியில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட தாக்குதலும் அதன் கார ணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்தத் தாக்குதலுக்கு ஏமனில் செயல்படும் ஹுதி கிளர்ச்சிப் படையினர் பொறுப்பேற்றனர். இருப்பினும், அதை நம்ப மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள், ஈரான்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இநிலையில், சவூதிக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ திடீர் பயணம் மேற்கொண்டார். பொம்பியோவின் இந்தப் பயணத்தின்போது, அமெரிக்காவிடம் சவூதி அரேபியா ராணுவ உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதைஏற்று, சவூதி அரேபியாவின் வான் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பிவைக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். வெர்ஜினியா மாநில, ஆர்லிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது, இந்தத் தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்தார்.
இதேபோல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் தங்களைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு அந்நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை அளிப்பது குறித்தும் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக டாக்டர் எஸ்பர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றை காலவரையறையின்றி நிறுத்திவைப்பது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
சவூதி எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை ஈரான் மீது அமெரிக்கா நடத்துமா என்பது குறித்த ஊகத்திற்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்நாடு மீது கூடுதல் பொருளியல் தடையைத் திரு டிரம்ப் விதித்துள்ளார்.
“ஈரானில் உள்ள 15 வெவ்வேறு முக்கிய இடங்களைச் சாய்த்துத் தள்ளுங்கள் என உத்தரவிடுவது எனக்கு மிகச் சுலபம். ஆனால், நான் அந்த முடிவை எடுக்கவில்லை,” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
எனினும், சவூதிக்கு ராணுவப் படைகளை அனுப்பி வைக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு, ஈரானை சினமூட்டக்கூடும் எனக் கூறப்படுகிறது. சவூதி எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஈரான் பகிரங்கமாக மறுத்துள்ளது.

