ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பின்கதவால் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி தென்னகோன் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல்கள் வரும்போது கடந்த 18 வருடங்களாக ஐ.தே.க முகம்கொடுத்து வந்த சிக்கலுக்கு மீண்டும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
மேலும் தங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது.
அது மாத்திரமன்றி தேர்தலுக்கு பயந்தே, ஜனாதிபதித் தேர்தல் முறைமை ஒழிப்பது குறித்து தற்போது பேசுகின்றது.
இவ்வாறு ஐ.தே.கவின் தலைமை தனது இயலாமையை மறைத்துகொள்ள பல்வேறு சூழ்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பின்கதவில் வந்தமையை போன்றே தற்போதும் வருவதற்கு பிரதமர் ரணில் முயலுகின்றார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

