தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை வேண்டி எழுக தமிழ் பேரணி இன்று யாழில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி , வடக்கு முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நிலையில் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் முடங்கியுள்ளன.
யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ள நிலையில் காலையிலேயே குடாநாடு வெறிச்சோடி, தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்த வழமை மறுப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
யாழ்குடாநாட்டின் பிரதான சந்தைகள் எதுவும் இன்று திறக்கப்பவில்லை என்பதோடு குடாநாட்டிற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.
பாடசாலைகள் இன்று வழக்கம் போல இயங்கும் என, அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், மாணவர்கள் பாடசாலைகளிற்கு செல்லவில்லை.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை. தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுகின்றன.
வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.
அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.