ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் கைநழுவிப்போகுமோ என்ற கவலையில், இந்தியாவுக்கு எதிராக, அவதுாறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தான்.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இம்ரான் கான் பேசியதாவது: காஷ்மீர் பிரச்னை தற்போது சர்வதேச அளவில், முக்கிய பிரச்னையாக எதிரொலிக்க, நாங்கள் தான் காரணம். 50 ஆண்டுகளுக்கு பின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இப்பிரச்னை எதிரொலித்துள்ளது. நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது எதுவென்றால், நான் காஷ்மீரின் துாதுரவாக உலகம் முழுவதும் செல்வேன்.
இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் குறித்து உலகுக்கு சொல்வேன். நாம் இப்போது பார்க்கும் இந்தியா, நேரு, காந்தி காலத்தில் இருந்த இந்தியா அல்ல. அடக்குமுறை காரணமாக, மக்களை பயங்கரவாதத்துக்கு துாண்டி வருகின்றனர். இவ்வாறு, இம்ரான் கான் பேசினார்.