சவுதியின் அப்கைக் மற்றும் குரைஸ் நகரில் உள்ள சவுதி அரம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டுரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இன்று அதிகாலை 4 மணியளவில்(சவுதி நேரப்படி) அப்கைக் மற்றும் குரைஸ் நகரில் செயல்படும் சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டுரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பிடித்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது. டுரோன் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
கடந்த மாதம், அரம்கோ ஷாபா எண்ணெய் ஆலையில் , இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் இடத்தில், ஏமனை சேர்ந்த ஹூதி அமைப்பினர், தாக்குதல் நடத்தினர். ஆனால், இதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு முன்னர், ஹூதி அமைப்பினர், சவுதி அரேபியா விமான தளங்கள் மற்றும் சில இடங்களில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். ஏமனில், சவுதி அரசு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. தற்போது நடந்த தாக்குதலுக்கு இந்த அமைப்பு இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.அப்கைக் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தான், அரம்கோவின் மிகப்பெரிய ஆலை ஆகும். கடந்த 2006 ல் அல் கொய்தா பயங்கரவாதிகள், வெடிபொருள் ஏற்றிய வாகனங்களுடன் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள் புகுந்து வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 2 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர். 2 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், ஒருவருக்கு, 2014ம் ஆண்டில், சவுதி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஒருவருக்கு 33 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.