தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த சவாலிலிருந்து நாட்டைக் காப்பதற்கு நாட்டை நேசிக்கும் ஒரு குழுவினாலேயே முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவின் “பண்ஹிந்தக விப்லவய” (எழுத்தாணியின் புரட்சி) விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
மல்வத்து, அஸ்கிரிய அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை மற்றும் கலைத்துறை விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.