எமது அரசாங்கத்தை போன்று வேறு எந்ததொரு அரசாங்கமும் மக்களுக்காக சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் தேர்தலுக்கு விரைவாக தயாராக வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலை எம்மால் நிச்சயம் வெற்றிக்கொள்ள முடியும்.
அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியொன்றை அமைத்து அதனூடாக தேர்தலை எதிர்க்கொள்ள தயாராக வேண்டும்.
2015 முதல் இருந்தே பல்வேறு சவால்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டு பாரிய அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.
குறுகிய காலத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்ததைப் போன்று வேறு எந்ததொரு அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.
ஆனாலும் எமது அரசாங்கத்தை குறைகூறுவதை மாத்திரமே பெரும்பாலானோர் செய்து வருகின்றனர்.
ஆகையால் அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிலையான அரசாங்கத்தைப் பெறுவதன் ஊடாக இந்த வேலையை பத்து மடங்கு அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பாழடைந்த நாட்டை மீட்டெடுக்கவே இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.
எம்மை பொறுத்தவரை எந்த பிரச்சினை வந்தாலும் மக்களுக்காக நாங்கள் நிறைய வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.
எமது ஆட்சியில் அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீதிகள், வீட்டுவசதி உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பாரிய வேலைகள் எங்களால் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாம் செய்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களும் அதனை உணர்வார்கள்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றியடைய முடியும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என பிரதமர் கூறியுள்ளார்.