ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து இன்று ஆராயப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து இதன்போது ஆணைக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாவுக்கு எதிரான முறைப்பாடு குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை– அமெரிக்க குடியுரிமையை கொண்ட கோட்டாபய தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனாலும் அமெரிக்காவினால் அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில், கோட்டாபயவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த விவகாரம் இலங்கை அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை, ஆணைக்குழு ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

