நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் தமிழர்களுக்கான 5 தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவாக இருக்கலாம். அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவாக இருக்கலாம். யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு தேவையென்றால், தமிழர்களுக்கான 5 தீர்வுத் திட்டங்களை அவர்கள் கட்டாயம் முன்வைக்க வேண்டும்
முதலாவதாக அரசியல் தீர்வு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். இரண்டாவதாக சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக கூற வேண்டும், மூன்றாவதாக அரசியல் கைதி தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும், நான்காவதாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் அத்தோடு, ஐந்தாவதாக வேலை வாய்ப்பு விடயம் தொடர்பாக உறுதி மொழிகளை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

