பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கோட்டவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமை குறித்து பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அதற்கமைய நிதியமைச்சர் மங்கள சமரவீர, “காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக்கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான ‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் இப்பதிவை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
குறித்த பதிவில், “அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிக்கின்றன” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.