கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவித்த பின், சபாநாயகர் பதவியை கே.ஆர்.ரமேஷ்குமார் ராஜினாமா செய்தார் .
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததாலும், சுயேச்சைகளாக இருந்த இருவர் ஆதரவை விலக்கிக் கொண்டதாலும் கர்நாடகத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, 105 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள பாஜக, எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரையும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.
இதனால் சட்டப்பேரவை பலம் 208 ஆக குறைந்தது. இந்த சூழலில், எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை எடியூரப்பா கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக, சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
பின்னர் பேசிய எடியூரப்பா, சித்தராமையாவும், குமாரசாமியும் முதலமைச்சர்களாக இருந்த போது பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றார். அதே போல் தாமும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று கூறிய எடியூரப்பா, மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தன்னை வெறுக்கும் நபர்களையும் நேசிப்பதாக எடியூரப்பா கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்ததை அடுத்து, சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து ரமேஷ் குமார் விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கி விட்டு அவையை விட்டு அவர் வெளியேறினார். இதை அடுத்து மாலை 5 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக நியமிக்கப்பட்ட ரமேஷ் குமார், தாமாகவே பதவி விலகவில்லை என்றால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.