முன்னாள் கல்வி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன, நாட்டில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட அரபு மத்ரஸாக்கள் இருப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் தலைமையிலான தூதுக்குழு ஒன்று அவரைச் சந்தித்து விளக்கமளித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி மௌலவி தாஸிம் தெரிவித்ததாவது,
அரபு மத்ரஸா பற்றிய 4 வகைகள் பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
மத்ரஸா அரபுக் கல்லூரி, மக்தப் மத்ரஸா, ஹிப்ழு மத்ரஸா, அஹதிய்யா பாடசாலை. இந்நான்கு பிரிவுகளையும் பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுத்து அது சம்பந்தமான தகவல்களும் வழங்கப்பட்டன.
மத்ரஸாவில் கல்வி கற்பவர்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் அதுபற்றி போதிப்பில்லையென்றும் வலியுறுத்திக் கூறப்பட்டது.
இதன் மூலம் அவருக்கு பூரண திருப்தியும் ஏற்பட்டதாகவும் எதிர்காலத்தில் தான் எழுதும் புத்தகத்தில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்குக் கிடைத்த தகவலினை வைத்துத்தான் தான் அக்கருத்தினைத் தெரிவித்ததாகவும் சரியான தகவலினை வழங்கியதும் அது அவருக்கு திருப்தியளித்ததாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற விளக்கங்களை நாம் பரிமாறிக் கொள்வதன் மூலம் அது மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்ததாக கில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.