ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும் பால் பக்கெட் ஒன்று வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ´பால் நிறைந்த தேசம்´ எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சு மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு என்பன இதற்கு பங்களிப்பு அளிக்கின்றது.
இந்நிகழ்ச்சியின் முதல் கட்டமாக தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான 4 இலட்சம் மாணவ மாணவிகளுக்கு தினசரி 150 மில்லி லீற்றர் பசும் பால் வழங்கி வைப்படவுள்ளதுடன், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய சுவையூட்டப்பட்ட பாலுக்கு பதிலாக தரம் உறுதி செய்யப்பட்ட திரவப் பால் பக்கற் ஒன்று வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக வருடத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.