ஆட்சி அதிகாரம் கைவசம் இருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆண்ட மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட குழுவினர் தற்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக தமிழ் முற்போக்கு கூட்டணி எதையும் செய்யவில்லை என்றும் அவர்களுக்கு 50 ரூபாய் சம்பள உயர்வைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வேலுகுமார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாக 50 ரூபாய் கொடுப்பனவை நிலுவைத் தொகையுடன் வழங்குமாறு நாம் அழுத்தம் கொடுத்தோம். இதற்கமைய அந்த சலுகை விரைவில் மக்களை சென்றடையும் என்பது உறுதி.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் எல்லாவற்றுக்கும் பலியாடுகள்போல் தலையாட்டி, கைகட்டி ‘ஆமாம் சாமி’ போடும் அரசியலை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கவில்லை. உள்ளே இருந்து போராடியவாறே உரிமைகளை வென்றெடுத்துவருகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் ஊமைவேடம் தரித்து, தலையாட்டிய மஹிந்தானந்த போன்ற அரசியல்வாதிகள் இந்த அரசாங்கமும் அப்படிதான்என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எமது மக்களுக்கு எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்பது எமக்கு தெளிவாக புரியும். வலிந்துவந்து பாடம் எடுக்கும் அரசியலை மஹிந்தானந்த கைவிடவேண்டும்.
மஹிந்த ஆட்சிகாலத்தில் தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர்களிடம் சந்தா வாங்கிக்கொண்டு ‘பந்தா’ காட்டிய மஹிந்தானந்த அளுத்கமகே என்ன செய்தார்? 10 வருடங்கள் மஹிந்தவின் ஆட்சி நீடித்தது. தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் இந்நேரம் ஆயிரத்தையும் தாண்டி சம்பளத்தை பெறக்கூடியதாக இருந்திருக்கும்.
ஆயுதம் தம்வசம் இருந்தபோது தாக்குதல் தொடுக்காதவர்கள், தற்போது வாயால் வடை சுடுவதற்கு முயற்சிக்கின்றனர். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்போது வாக்குவேட்டை நடத்துவதற்காகவே தொழிலாளர்கள்மீது கருணைகாட்டுவதுபோல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.