யாழில் காணிப்பிணக்கினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை- கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேகநபரான அப்பெண்ணின் பெரிய தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டுள்ளது.
இதனால் பெரியதந்தையார் கத்தியுடன் சென்று கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார். அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்துள்ளார்.
அதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு சரணடைவதற்காக புறப்பட்டுள்ளார்.
இதன்போது வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரையும் கத்தியால் குத்துவதற்கு முற்பட்ட போது, அந்தப் பெண் பெரியதந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
ஆனாலும் குறித்த பெண்ணை பெரிய தந்தையார் துரத்திச் சென்றபோது, அவள் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார்.
அதன்போது அவரை கழுத்து அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.