பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் NTJ அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஐவர் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகத்தின் கீழ் சேவையில் ஈடுபட்ட ஹொரவப்பொத்தானை கிவுலேகட, கபேதிகொல்லாவ அல்லேவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தீவிரவாத பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தற்போது வெளிநாட்டிலிருக்கின்ற பிரதான சந்தேகநபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் குறித்த நபரிடமிருந்து இலட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நாளை கபேதிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 72 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.