பௌத்த மக்களிடையே மாற்று மதத்தவர்கள் பற்றிய குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்திய கருத்துக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹேசான் விதானவுக்கு எதிராக விசாரணையொன்றை நடாத்துமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் லங்கா ஜயரத்ன ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி தாக்குதல், பௌத்த மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தால், அப்பாவி முஸ்லிம் சமூகம் கொலை செய்யப்பட்டு, பாரிய அழிவொன்று ஏற்பட்டிருக்கும் என ஹேசான் விதான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை குற்றவியல் சட்டத்தின் 290 (அ) சரத்தின்படியும் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவின் அடிப்படையிலும், குறித்த நபர் குற்றம் இழைத்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவு நீதிமன்றத்துக்கு முன்வைத்த கருத்தை கருத்தில் கொண்டே நீதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.