இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரித்தானியாவில் விடுதலை புலிகள் மீதான தடை தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு குழு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தடையை நீக்குவது குறித்து அந்த குழுவிடம் இந்த வருட இறுதியில் நீதிமன்றம் சாட்சியம் கோரும் என்றும் மோர்னிங் ஸ்டார் ஊடகத்திற்கு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் மேன்முறையீட்டு ஆணையத்தில் இந்த விடயத்தை இரகசியமாக விசாரிக்க வேண்டும் என அரச திணைக்களம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நீதிமன்றம் தமிழர்கள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு தெரிவித்தது. இந்த வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரித்தானியா உள்ளடங்கிய சட்டத்தரணிகள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்க வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடையை எதிர்த்து பேராசிரியர் கொனோர் ஜார்டி என்பவரை பிரதிநிதித்துவப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு விண்ணப்பம் செய்தது.
மேலும், இந்த தடை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான தடையாக இருக்கின்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.