தேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து சீன ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங் அனுப்பிவைத்த செய்தியில், குண்டுவெடிப்பு சம்பவங்களை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்கள் நலமடைய பிரார்த்திப்பதாகவும், மக்களின் துன்பங்களில் என்றும் பங்கெடுக்க தயாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன பிரதமர் லீ கெகியாங் அனுதாபச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கொழும்பு அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்களிலும் பிரபல நட்சத்திர விடுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அதன்பின்னர் தெட்டகொட, தெஹிவளை போன்ற பகுதிகளிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் 290இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 500 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.