நாட்டில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும், இது மனித தன்மையுள்ளவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லவெனவும் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஆறு தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற நடவடிக்கைகளினால் அப்பாவி மனித உயிர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக நாம் நினைத்தோம். மீண்டும் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதற்கு எமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த சம்பவங்களின் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியாது. எமக்கு யாரையும் சொல்லவும் முடியாது. இதனை இலங்கையர்களின் நடவடிக்கையா? அல்லது வெளிநாட்டு குழுக்களின் நடவடிக்கையா? என்று கூறவும் முடியாது.
இருப்பினும், இந்த சம்பவங்கள் இடம்பெற்ற போக்கைப் பார்க்கும் போதும், தொடர்ந்து பல இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கும் போது திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பதை விளங்க முடிகின்றது.
இலங்கை மக்கள் பதற்றப்படாமல், சட்டத்தைக் கையில் எடுக்காமல் இருக்குமாறு நான் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க பொறுப்புவாய்ந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படியான மனிதாபிமானமற்ற மிருகத்தனமானநடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் கூறினார்.