முப்படையின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்புக்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில்-
நாட்டில் எதிர்பாராத விதத்தில் இடம்பெற்றுள்ள குண்டு தாக்குதல்கள் கடந்த கால நினைவுகளை மீட்டியுள்ளன. இச் சம்வங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டில் தற்போது உள்ள தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்கமே முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்சி ரீதியிலற்ற அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு நாளில் இடம்பெற்ற கோர சம்பவம் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான இக்கட்டான நிலையில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாதுகாப்பினை பலப்படுத்த தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் ஏற்பாடுகளுக்கு பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்புடனும் ஒருமைப்பாடுடனும் செயற்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.