போலியான கருத்துக்களை பொதுஜன பெரமுன தெரிவித்துவருகின்றது ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போலியான கருத்துகளை தெரிவிப்பதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
முல்கம பிரதேசத்தில் ரயில்வே திணைக்கள கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வருடம் 150 இலட்சம் மக்கள் வாக்களிப்பார்கள். அதில் சுமார் 140 இலட்சம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளாகப் பதிவாகும். வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும் 65 – 70 இலட்சம் வாக்குகளைப் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ற செயற்திட்டங்களை முறையாக முன்னெடுத்தால் எம்மால் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற முடியும்.
2015 ஆம் ஆண்டு நாம் தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்ய முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும் 4 இலட்சம் கூடுதலான வாக்குகள் பெற்று நாம் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதேபோன்ற போலியான கருத்துகளையே தற்போதும் பொதுஜன பெரமுனவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

