பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமான நிலையங்களில், மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை புகுந்து, பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது.
இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் கடும் பதற்றம் நிலவியது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் உள்ள, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பைசாலாபாத், சியோல்கோட், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், காலவரையின்றி மூடப்பட்டன. இதனால், பயணியர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
எல்லையில் சற்று பதற்றம் குறைந்த நிலையில், கராச்சி, இஸ்லாமாபாத், பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், விமான சேவைகள் துவக்கப்பட்டன. லாகூர் விமான நிலையம், நேற்று காலை திறக்கப்பட்டு, விமான சேவைகள் துவங்கின. முல்தான் விமான நிலையம் திறப்பு குறித்து, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

