பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாக்.,கில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பின் தலைவன் மசூத் அஸார் பாக்.,கில் வசிப்பதை சமீபத்தில் உறுதி செய்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, அவன் உடல் நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அஸார் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ஜெய்ஷ் – இ – முகமது அமைப்போ பாக்., அரசோ உறுதி செய்யவில்லை.
மசூத் அஸார் பாக்.,கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவன். ஜம்மு – காஷ்மீருக்குள், போர்ச்சுகல் நாட்டு போலி பாஸ்போர்ட் உடன் நுழைந்த மசூத் அஸார் அங்குள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தினான்.கடந்த 1994ல் மசூத் அஸார் கைது செய்யப்பட்டான். சிறையில் இருந்து தப்பிக்க மசூத்தும், கூட்டாளிகளும் சுரங்க பாதையை தோண்டினர்.அந்த குகையில், தான் முதலில் செல்வதாக கூறி இறங்கிய மசூத் அஸார் உடல் பருமனாக இருந்ததால் குகையின் ஒரு பகுதியில் சிக்கிக் கொண்டான். இதனால் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின் 1999ல், ஆப்கானிஸ்தான் நாட்டின் காத்மாண்டு நகரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மசூத்தின் கூட்டாளிகள் கடத்தினர். பயணியரை பாதுகாப்பாக விடுப்பதற்காக மசூத்தை இந்திய அரசு விடுவித்தது.மசூத் அஸாருக்கு அல் – குவைதா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன், தலிபான் தலைவன் முல்லா முகமது ஒமர் ஆகியோருடன் தொடர்பு இருந்தது. கடந்த 2000ல் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை மசூத் அஸார் துவக்கினான். 2001ல் இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், நம் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் இந்தியா – பாக்., இடையே போர் மூளும் நிலை உருவானது.பயங்கரவாத புகார்களால் பாக்.,கில், வீட்டுச் சிறையில் மசூத் அஸார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் ‘போதிய சாட்சியங்கள் இல்லை’ எனக்கூறி, 2002ல் அவன் விடுதலை செய்யப்பட்டான்.

