2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று காலை ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஐ.தே.க. வின் நிலைப்பாட்டை வினவியபோதே கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்தனர்.
எனவே, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான தேவைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது. அதை செய்யவும் மாட்டோம்” என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.