பாகிஸ்தானின் பாலகோட்டில், ஜெய்ஷ இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, பாக்.,கை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தர வேண்டும் என்ற எண்ணம், நாட்டு மக்களிடையே வலுப்பெற்றது. அதை நனவாக்கும் வகையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த, ‘மிராஜ் – 2000’ ரக போர் விமானங்கள், பாலக்கோட்டில் உள்ள, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத முகாம் மீது, சரமாரி தாக்குதல் நடத்தின. இதில், அந்த முகாம் தவிடுபொடியானது. ஆனால், இதனை மறுத்த பாகிஸ்தான் ராணுவம், காலி இடத்தில் தான் இந்தியா குண்டுபோட்டதாக கூறி வருகிறது.
இந்நிலையில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரன் மவுலானா அம்மர் பேசிய ஆடியோ கிளிப் ஒன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.மவுலானா அம்மர் பேசிய ஆடியோவில்; பாகிஸ்தான் ராணுவம் , மற்றும் அரசு அலுவலகம் மீது இந்தியா குண்டுபோடவில்லை. இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி வந்து, ஜிகாதி குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட மையத்தில் வெடிகுண்டுகளை வீசியது. எங்களின் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான். இவ்வாறு அம்மர் கூறியுள்ளான்.