பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்துள்ளது.
இந்தியா – பாக். தாக்குதல்களும் இந்திய விமானி சிறைப்பிடிப்பும்
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள், நேற்று முன்தினம் அதிகாலை எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. பாலகோட்டில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாம் மீது ஆயிரம் கிலோ குண்டுகளை வீசி, 350 தீவிரவாதிகளை தூங்கிக் கொண்டிருந்த போதே கூண்டோடு ஒழித்துக் கட்டியது.
பாலகோட் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்காக நேற்று அதிகாலை காஷ்மீர் எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. நடுவானில் நடந்த இந்த பரபரப்பான சண்டையின் போது, பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து அந்நாட்டின் எப்-16 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அதேபோல், பாகிஸ்தானும் இந்தியாவின் மிக் -21 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதை இயக்கிய சென்னை விமானி அபிநந்தனை அந்நாடு சிறை பிடித்தது..இதையடுத்து அபிநந்தனை மீட்க ராஜாங்கரீதியிலான நடவடிக்கையை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது.
அண்டை நாடுகள் கவலை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சீனா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து வருகின்றன.
சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு
இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூள்வதை தடுக்க, சர்வதேச நாடுகள் முயற்சியில் இறங்கியுள்ளன. சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தி வருகின்றன. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பேசினார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமை இந்தியா அழிப்பதை ஆதரிப்பதாக பேசினார்.
தீவீரவாதிகளுக்கு பாக். புகலிடம் வழங்க கூடாது : அமெரிக்கா
இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. எல்லையில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் இருநாடுகளிலும் பதற்றம் அதிகரிக்கும் தற்போதையை பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து, நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியுள்ளது. தீவீரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது எனவும், அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்யுமாறும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா, சீனா அறிவுரை
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நுழைந்த போதே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமடைய வேண்டுமென சீனா வலியுறுத்தியது. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங்க் விடுத்துள்ள அறிக்கையில், ‘தற்போது நடந்து வரும் சம்பவங்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்காசியாவின் முக்கியமான நாடுகள். எனவே, இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொண்டு, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். இதேபோல், ரஷ்யாவும் பேச்சு நடத்தும்படி கூறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் கவலை தருகிறது : பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் மிகவும் கவலை அளிக்கிறது என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார். பிரச்னை மேலும் தீவிரமாவதை தடுத்து நிறுத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அழுத்தம்
பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்துள்ளது. பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் ராணுவ நடவடிக்கைளை தவிர்க்க வேண்டும் எனவும் ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் போர் பதற்ற சூழலை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோரா கோனா கேட்டுக் கொண்டுள்ளார்.