காலி ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்மாகாண விசேட குற்ற விசாரணை பிரிவின் பிரதி பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கபில நிஷாந்த டி சில்வா மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசாரணை பிரிவின், ஆயுத மற்றும் கைத்துப்பாக்கி களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஆலோசனைக்கு இணங்க குறித்த களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆயுத களஞ்சியசாலைக்கு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வர்த்தகர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கெப் ரக வாகனம் ஒன்று நேற்று குற்ற புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வலஸ்முல்ல காட்டு பகுதியில் வலஸ்முல்ல நீதவான் சுரங்க முனசிங்க முன்னிலையில் மனித எச்சங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
காலி- ரத்கம பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ரசீன் சிந்தக்க மற்றும் 33 வயதுடைய மஞ்சுல அசேல ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த வர்த்தகர்கள் இருவரும் கடத்தப்பட்டு அக்மீமன – கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களது உடல்கள் வலஸ்முல்ல – மெதகம்கொட – கனுமுல்தெனிய வனப்பகுதியில் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.