கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலான செய்தி மக்களை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு நடவடிக்கையே ஆகும் என மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பதை விடவும் இதனைப் பரப்புவதற்கான நோக்கம் இதுவாகும் என ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மா தொடர்பிலான செய்தி, போதைப் பொருள் கடத்தல் காரர் மாகந்துரே மதூஷ் குறித்த செய்திகள் என்பவற்றின் பரபரப்பு குறைந்து இப்போது அமைச்சர்களின் கொக்கேன் செய்தி இடம்பிடித்துள்ளது.
தேர்தல் வருகின்றது. இதனைத் தேர்தல் வருடம் என்று ஜனாதிபதி வர்ணித்துள்ளார். கடந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? மக்களுக்கு அரசாங்கத்தினூடாக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? புதிய அரசியல் யாப்பு மாற்றம் போன்ற அம்சங்கள் என்பன பற்றிய பேச்சு ஊடகங்களில் குறைந்துள்ளது. ஊடகங்களில் வராது விடின் மக்களிடமும் அது அழிந்து மறைந்து போகும் என்பதே யதார்த்தமாகும்.