அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையின் கட்டைவிரலுக்கு ஒத்த பெரியதொரு ரட்சத தேனீ, இந்தோனீசிய தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் இதுவரை மிக குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
சில நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், உயிரோடு ஒரு பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்த வனவிலங்கு நிபுணர்கள், அதனை புகைப்படம் எடுத்து, காணொளி பதிவும் செய்துள்ளனர்.
‘வாலேஸ்’ ரட்சத தேனீ’ என்று இது அறியப்படுகிறது. 1858ம் ஆண்டு இதனை பற்றி விளக்கமளித்த பிரிட்டிஷ் இயற்கை மற்றும் ஆய்வாளர் ஆப்ஃபிரெட் ருசெல் வாலஸின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் மூன்று தீவுகளில் இந்த பூச்சி பற்றிய பல்வேறு மாதிரிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கடந்த ஆண்டு ஆன்லைனில் இரண்டு தேனீக்களின் மாதிரிகள் விற்கப்பட்டுள்ளபோதும், இந்த தேனீ உயிரோடு இருப்பதை யாரும் பார்த்திருக்கவில்லை.
வாலேஸின் அடிச்சுவட்டை பின்பற்றிய விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஜனவரி மாதம் இந்தோனீசியாவில் இந்த ராட்சத தேனீயை கண்டுபிடித்து புகைப்படம் எடுக்க ஆய்வுப்பயணம் மேற்கொண்டது.