ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30/1 பிரேரணையின் கீழான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிக கால அவகாசம் வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுக்கவுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமக்கு குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசத்தை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை தொடர்பில் ஆராய பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொண்டெனேகுரோ ஆகிய நாடுகளை உள்ளடங்கிய முக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த குழுவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சு கால நீடிப்பு தொடர்பான தனது கோரிக்கையை முன் வைக்கவுள்ளது.
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொண்டெனேகுரோ ஆகிய நாடுகளுடன் இணங்கி செயற்படவுள்ளதாக ஜேர்மனும் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்க முடியும் என ஜேர்மன் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தாத நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை கோரியது.
ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென வாக்குறுதி வழங்கப்பட்டது. அதற்கிடையில் தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக தீர்வு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான பின்னணியில் ஐ.நா.வின் முக்கிய அறிக்கை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

