காஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். விரைவில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் பயங்கரவாதிகளுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சில அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து பணம்பெற்று வருகிறார்கள்.
பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான போரில் இந்தியா வெற்றிபெற்றே தீரும்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையாக இனி சில நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் வீதிகளில் வேறெந்த தனியார் வாகனங்களும் இடையில் செல்ல முடியாதவாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

