தமிழ் நாட்டைச் சேர்ந்த ரெஜினா இப்போது தெலுங்கில் முன்னணி நடிகை. தமிழிலும் நடித்து வருகிறார். அவர் ஏக் லட்கி கொ தேக்ஹா தோ ஐசா லகா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சோனம் கபூரை காதலிக்கும் ஓரினசேர்க்கையாளராக (லெஸ்பியன்) நடித்துள்ளார். கடந்த வாரம் படம் வெளியானது. இதில் ரெஜினாவை ஒரு புறம் விமர்சித்தாலும், இன்னொருபுறம் அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு நடிகை எந்தவித கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். நான் தென்னிந்திய நடிகையாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எல்லைகளை கடந்து செல்ல விரும்புகிறேன். இந்தி திரையுலகிலும் எனது திறமையை நிரூபிக்கவே லெஸ்பியனாக நடித்தேன். லெஸ்பியனாக நடிக்கும் முதல் நடிகையும் நானல்ல. இதற்கு முன் பலர் நடித்திருக்கிறார்கள்.
நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலம் மாறிக் கொண்டிருக்கிறது. லெஸ்பியன்களின் வாழ்க்கையை அங்கீகரிக்க வேண்டும். யார் எப்படி வாழ விரும்புகிறார்களோ அவர்களை அப்படியே வாழவிட வேண்டும். எனது தோழிகளில் சிலர் லெஸ்பியன்களாக இருக்கிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.
உச்சநீதிமன்றம் ஓரினிச்சேர்கைக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அது பற்றிய விவாதங்கள் நடந்து வருகிறது. அதைப்போலத்தான் இந்தப் படமும், அதுகுறித்து பேசியிருக்கிறது என்கிறார் ரெஜினா.

