Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இளையராஜா 75’இல் ரிலீஸாகாத பின்னணி!

February 8, 2019
in Cinema, News
0

1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழிகளில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருபவர். தனது இசைப் பயணத்தில் மூன்றாம் தலைமுறையோடு பயணித்துக்கொண்டிருப்பவர்.

இளையராஜாவுக்கு 75 வயது நிறைவடைவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் ‘இளையராஜா – 75’ எனும் பெயரில் சென்னையில் இரண்டு நாள் விழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்தது. ஏற்கெனவே நடந்த இதுபோன்ற விழாக்களை தமிழ்த் திரையுலகம் ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வுடன் நடத்தியது. ஆனால், இந்த விழா தொடக்கத்திலிருந்தே பல அபஸ்வரங்கள். இந்த நிகழ்ச்சியையே நடத்தக் கூடாது எனச் சிலர் நீதிமன்றத்தை நாடும் அளவுக்குச் சிக்கல்கள் இருந்தன.

இந்த அபஸ்வரங்களின் எதிரொலியை பிப்ரவரி 2 அன்று சென்னையில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் காண முடிந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தார். இளையராஜாவின் இசையோடு மிக நெருங்கிய தொடர்புகொண்ட பல இயக்குனர்களும், பாடலாசிரியர்களும், தயாரிப்பாளர்களும் முதல் நாள் விழாவில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக இளையராஜாவின் இசைக்கு மறக்க முடியாத பல வரிகளை எழுதிய கவிஞர் வைரமுத்து கலந்துகொள்ளவில்லை. இளையராஜாவின் தொடக்க கால இசையைக் காட்சிகள் மூலம் திரையரங்குகளுக்குக் கொண்டுசென்ற இயக்குனர் பாரதிராஜாவும் விழாவுக்கு வரவில்லை. அவர்கள் இந்த விழாவில் இடம்பெறுவது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு அது பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கும்.

இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் விழாவில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் ராஜாவுடனான அனுபவங்களை, அவரது இசை ஆளுமையைப் பற்றிப் பேசுவதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யத் தவறிவிட்டு, கிடைத்தவர்களை வைத்து சோபையான நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது கண்டு விழாவுக்கு வந்தவர்கள் முகம் சுளித்ததைக் காண முடிந்தது. இந்த விழாவுக்கு ஏ.ஆர்..ரஹ்மானைக் கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்த இயக்குநர் பார்த்திபன் சங்கத்தில் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததற்கான காரணமும் புரிந்தது. இது போன்ற விழாக்களில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் கைதேர்ந்த பார்த்திபன் கூறிய ஆலோசனைகளைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் நிராகரித்ததால் நடக்கப்போகிற சொதப்பல் நிகழ்ச்சிகளுக்குத் தானும் காரணமாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே அவரை ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்தது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ரஹ்மான் விழா அரங்கிற்குள் நுழைந்தபோது அரங்கம் அதிர கைத்தட்டல் ஒலித்தது. இளையராஜாவை கௌரவிக்க அவர் மேடையேறினார். “என்னிடம் 500 படங்களுக்கு வேலை செய்ததை நீ கூறவில்லையே?” என இளையராஜா கூறியபோது, ‘அவரைப் பாராட்ட வந்த மேடையில் இதெல்லாம் தேவையா?’ என்ற குரல்களை ரசிகர்கள் மத்தியிலிருந்து கேட்க முடிந்தது. “உங்களிடம் ஒரு படம் வேலை செய்தாலே எல்லா அனுபவமும் கிடைக்கும்” என்ற ஒற்றை வரி பதிலில் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார் ரஹ்மான்.

வரலாறு அறியாதவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து நடத்துகிற விழாக்கள் அமெச்சூர்த்தனமாக இருக்கும் என்பதை முதல் நாள் விழா நிகழ்ச்சிகள் பறைசாற்றின. சுஹாசினி, கஸ்தூரி ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஏற்பாடு செய்ததில் வெளிப்பட்டது நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களின் அமெச்சூர்த்தனம்.

பொதுவான ஒரு விழாவில் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அரங்கேற்றும் விதமாக நிகழ்ச்சிகளை அரங்கேற்ற அனுமதித்த விஷாலின் முடிவு எதிர்வரும் நாட்களில் பிரச்சினைகளையும், விவாதத்தையும் திரையுலகில் ஏற்படுத்தும். அவருக்கு எதிராக இயக்குனர்கள் சங்கம் கண்டனங்களை வெளிப்படுத்தவும் கூடும். ஏனென்றால், தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லாமல் வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் டி.ராஜேந்தர், ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, ஹரி, சுந்தர்.சி ஆகியோர். இவர்கள் இளையராஜாவிடம் இசையமைக்கக் கேட்டு வருவது போன்று டிராமா ஒன்றை அரங்கேற்றியதும் பக்குவமற்ற செயலாகவே தெரிந்தது.

இளையராஜா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அஷ்டாவதனியாகத் தனி ராஜாங்கம் நடத்தியவர் டி.ஆர். அத்தகையவரை காமெடியானாகச் சித்தரித்து கலாய்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்து அரங்கேற்றியது அறுவை ரகம் மட்டுமல்ல, சாதனையாளரை அவமானப்படுத்தியதற்கு ஈடானது.

Previous Post

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

Next Post

திருப்பதி கோயில் தங்கக் கிரீடங்கள் காணாமல் போயுள்ளன

Next Post

திருப்பதி கோயில் தங்கக் கிரீடங்கள் காணாமல் போயுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures