தேசிய புத்தெழுச்சியை ஏற்படுத்துவதிலும் முன்னேற்றத்திற்கும் வறுமையும் ஊழலும் எதிரிகளாக உள்ளன. அவற்றை தகர்த்தெறிய அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயரிய அர்த்தத்தை அடைவதற்கு புதிய நோக்குடனும் புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே அனைவரதும் குறிக்கோளாக அமைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்தோடு, ஆரம்பம் முதலே அந்நியர் மீது தங்கியிராது செயற்பட்டமையே தனித்துவத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அந்தவகையில் நாட்டின் பொருளாதாரத்தின் அத்திவாரமாக இருக்கும் விவசாயத்தை மீண்டும் செழிப்புடன் முன்னெடுப்பது அவசியமென கூறியுள்ளார்.

